Search This Blog

Thursday, 1 February 2018

இனி கார்டு மட்டுமே.. சுங்கச்சாவடிகள் மின்னணு மயமாகின்றன.. பட்ஜெட்டில் ஜேட்லி

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

டோல்கேட் வசூல்

தமிழகத்தில் 35க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் கட்டணங்கள் மாறுபடுகின்றன. சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது சுங்கச்சாவடிகளில் வரிசையாக நின்று கட்டணம் செலுத்துவது பெரும் பாடாகிறது.

டோல்கேட் கொள்ளை

நெடுஞ்சாலைகள் அமைத்து தரும் தனியார் நிறுவனங்கள், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த சுங்கச் சாவடியும் மூடப்படவில்லை. தொடக்கத்தில் 40 கி.மீ.க்கு சுங்கச்சாவடிகளில் தொடக்கக் கட்டணமே ரூ.20 ஆக இருந்தது. தற்போது சில இடங்களில் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, கட்டண வசூலை எதிர்த்து பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மின்னணுமுறை

மற்றொருபுறம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசலுடன் காலதாமதமும் ஏற்படுகிறது. நெரிசலைத் தவிர்க்க, சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் முறை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

டோல்கேட் வசூல்

கடந்த 2016ஆம் ஆண்டு உயர்பணமதிப்பு நீக்க அறிவிப்பின் போது டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் பெரும் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து சில மாதங்கள் சலுகை அறிவிக்கப்பட்டது. பணபுழக்கம் அதிகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சரக்கு வாகனங்கள்

தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த 15 நாட்களாக சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இ-வே பில் முறை நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் முறைப்படி இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகிறது. தமிழகம், ஆந்திரா, பீஹார், கர்நாடகம், புதுச்சேரி, சிக்கிம், தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் அமலாகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை வேகமாக கொண்டு செல்லவும், சுங்கச்சாவடிகளில் லாரிகள் காத்திருப்பை தவிர்க்கவும் உதவும்.

மின்னணு முறையில் கட்டணம்

கடந்த 2016 நவம்பர் முதல் மின்னணு பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மின்னணுமயமாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இது விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சாலைகளில் வாகனங்கள் அதிக நேரம் காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

No comments:

Post a Comment