Search This Blog

Tuesday, 6 February 2018

பள்ளி தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து; 5 மாணவர்களுக்கு வலை

திருப்பத்தூர்: திருப்பத்தூரில், ஆபாச படம் பார்த்ததை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்ததால், அவரை கத்தியால் குத்திய, ஐந்து மாணவர்களை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில், ராமகிருஷ்ணா அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது. பாபு, 56, என்பவர், இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு நாள் விடுமுறைக்கு பின், பள்ளி நேற்று இயங்கியது. பகல், 12:30 மணிக்கு, தலைமை ஆசிரியர் பாபு, வகுப்புக்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, பள்ளியின் முதல் மாடியில், காலியாக உள்ள ஒரு அறையில், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவர்கள், ஐந்து பேர், மொபைல்போன் வைத்து, பார்த்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த தலைமை ஆசிரியர் பாபு, ’வகுப்புக்கு செல்லாமல், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டு, அவர்களிடமிருந்த மொபைல்போனை பறித்து பார்த்தார். அதில், மாணவர்கள் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், அவர்களை கண்டித்து, ’உங்கள் பெற்றோரிடம் சொல்லப் போகிறேன்’ என்று, கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்களில் நான்கு பேர், தலைமை ஆசிரியை கெட்டியாக பிடித்துக் கெண்டனர். ஒரு மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தலைமை ஆசிரியர் பாபுவின், வயிறு, தலை, மார்பில் குத்தினார்.

இதில் குடல் சரிந்து, தலைமை ஆசிரியர் கீழே விழுந்தார். இதை பார்த்த, ஐந்து மாணவர்களும், பள்ளி சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். தலைமை ஆசிரியர் அலறல் சத்தம் கேட்டு, மற்ற ஆசிரியர்கள் அங்கு வந்து அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக, டாக்டர்கள் கூறினர்.

திருப்பத்தூர் டவுன் போலீசார், மாணவர் குத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய, ஐந்து மாணவர்களையும் பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர், பள்ளிக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். கத்தி குத்துப்பட்ட தலைமை ஆசிரியர் பாபு, அதே பள்ளியில் 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment