Search This Blog

Thursday, 25 January 2018

ஓட்டளிக்கும் முறை மாற்றக்கோரி வழக்கு

மதுரை : ஓட்டளிப்பதை கட்டாயப்படுத்தவும், ஓட்டு அளிக்கும் முறையை மாற்றி அமைக்கவும் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்றைக்கு (ஜன., 25) ஒத்திவைத்தது.

மதுரை எல்லீஸ்நகர் சந்திரசேகரன் தாக்கல் செய்த பொது நலவழக்கில் கூறியதாவது: தற்போதைய சூழலில் அரசியல் என்பது சரியான நிலையில் இல்லை. தேர்தல்கள் மூலம் முறையான வேட்பாளர்களை தேர்வு செய்வதில்லை. ஓட்டுக்கு பணம் வழங்குவது, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஓட்டளிக்க வற்புறுத்துவது என வேட்பாளர் தேர்வுக்கு ஓட்டளிப்பது முறையாக நடப்பதில்லை. இதனால் உரிய நபர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.

தகுதியற்ற நபர்கள் தேர்வு செய்யப்படுவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வோரில் 10 பேரை குலுக்கலில் தேர்வு செய்து போட்டியிட வாய்ப்பு தரவேண்டும். பிறருக்கு அவர்கள் டிபாசிட் செய்த பணத்தை திருப்பி வழங்க வேண்டும். தேர்வு செய்த வேட்பாளர்களை ஊடகம் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும்.

வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும்.இதனால் ஓட்டுக்கு பணம், அன்பளிப்பு வழங்குவதை தடுக்க வாய்ப்பு கிடைக்கும். அரசே ஏற்பாடு செய்து வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, அங்கே அவர்களது பிரசாரத்தை முன்வைக்க வேண்டும்.
இதை முன்னிறுத்தி உரிய நடவடிக்கை கோரி தொடர்புடைய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் டிச., 15 மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதுபோன்று நடவடிக்கையால் ஓட்டு சேகரிக்கும், ஓட்டளிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்தால், தகுதியான நபர்களை தேர்வு செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

எனவே ஓட்டளிப்பதை கட்டாயமாக்கவும், மத்திய சட்டம், நீதி அமைச்சக செயலரும், இந்திய சட்ட ஆணைய தலைவரும் ஓட்டளிக்கும் முறையை மாற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், அதன்படி மாற்றம் கொண்டு வருவது குறித்து உரிய காலத்திற்குள் முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment