Search This Blog

Thursday, 25 January 2018

திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு மாநில அரசு விருது

சென்னை: குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு, மாநில அரசு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

'பெண் குழந்தை தொழிலாளர்; பெண் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில், வீர தீர செயல் புரிந்த, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினமான, ஜன., 24ல், விருது வழங்கப்படும்' என, 2017 - 18 பட்ஜெட்டில், சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவைச் சேர்ந்த, 14 வயது சிறுமி நந்தினி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்துடன் கூடிய விருதை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.
உறவினர்கள், குடும்பத்தினர், தனக்கு நடத்தவிருந்த திருமணத்தை, போராடி, சிறுமி நந்தினி தடுத்து நிறுத்தினார். அவரது துணிச்சலை பாராட்டி, இவ்விருது வழங்கப்பட்டது.

இது குறித்து, மாணவி நந்தினி கூறியதாவது:என் தாய் இறந்த பின், தந்தை என்னை விட்டு சென்று விட்டார். அதன்பின், என் பெரியம்மா பாதுகாப்பில் இருந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, பெரியம்மா திருமண ஏற்பாடு செய்தார்.

'திருமணம் வேண்டாம்' எனக் கூறினேன்; ஏற்கவில்லை; என் நண்பர்கள் கூறியதையும் ஏற்கவில்லை.
கலெக்டருக்கு போன் செய்தேன்; அவரது உதவியாளர் பேசினார். அதன் பின் பேசிய, சமூக நலத்துறை அலுவலர், 'பயப்படாமல் இரு; நான் வருகிறேன்' எனக் கூறி ஆறுதல் கூறினார்.

இரவு, என் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர். சமூக நல அலுவலர் வந்ததும், 'திருமணம் பிடிக்கவில்லை; என்னை கட்டாயப்படுத்துகின்றனர்' எனக் கூறினேன்.
அவர், என்னை அங்கிருந்து அழைத்து சென்றார். தற்போது, குழந்தைகள் காப்பகத்தில் உள்ளேன். 10ம் வகுப்பு படிக்கிறேன்.
அரசு தேவையான உதவிகளை செய்துள்ளது. எனக்கு விருது கொடுத்த முதல்வருக்கு நன்றி. என்னை போன்றவர்களுக்கு, முன்னுதாரணமாக திகழ வேண்டும் என நினைக்கிறேன். பெண்கள் எதற்கும் பயப்படக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment