Search This Blog

Wednesday, 31 January 2018

எவ்வளவு காசு கொடுத்தாலும் உருவாக்க முடியாது... நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் கேப்டவுன்!

கேப் டவுன் : இயற்கை வளமான தண்ணீர் சேமிப்பின் அவசியம் அவரவர்களுக்கு கஷ்டம் வரும் வரை புரியாது. தண்ணீர் சேமிப்பிற்கான அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை மணி தென்ஆப்ரிக்காவின் கேப்டவுனில் அடிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வறண்டு வரும் நீர் இருப்பால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தண்ணீருக்காக கலவரமே வெடிக்கலாம் என்ற நிலையை அடைந்திருக்கும் கேப்டவுன் இந்த நூற்றாண்டில் நம் கண்முன்னே இருக்கும் மிகச்சிறந்த முன் உதாரணம்.

தென்ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகர மக்கள் தண்ணீருக்காக அலையாய் அலைகின்றனர். அன்றாட செயல்களுக்கே தண்ணீர் கிடைக்காத நிலையில் அங்கிருக்கும் நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ரேஷன் முறையில் அரசு மக்களுக்கு நாள் ஒன்றிற்கு நபர் ஒருவருக்கு 50 லிட்டர் தண்ணீர் வீதம் விநியோம் செய்து வருகிறது.
எப்படித் தான் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தினாலும் ஏப்ரலுக்குப் பிறகு இங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காதாம். இதனால் ஏப்ரல் 12ஐ டே ஜீரோ தினமாக அரசு அறிவித்துள்ளது.


ஏப்ரல் 12க்குப் பிறகு தண்ணீருக்காக என்ன செய்யப் போகிறது அரசு என்ற கேள்விக்கு எந்த விடையும் இல்லை. அண்டை நகரங்களில் உள்ளவர்கள் முயற்சி எடுத்து தங்களால் முயன்ற அளவுக்கு 5 லிட்டர் வீதம் தண்ணீரை கேப்டவுன் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டும் சமூகவலைதளங்கள்

சமூக வலைதளங்கள் மூலம் கேப் டவுன் மக்களுக்காக தண்ணீர் சேமித்து அனுப்பும் படலங்களும் நடைபெற்று வருகின்றன. தண்ணீர் தானே என்று அலட்சியப் படுத்தி அதன் முக்கியத்துவத்தை உணராமல் நீர் சேமிப்பிற்கு செவி சாய்க்காமல் இருந்தால் கேப்டவுன் நிலைமை நாளை உலகின் எந்த மூலையிலும் நடக்கலாம்.

உருவாக்க முடியாத வளம்

இயற்கை வளங்களில் நம்மால் மீண்டும் உருவாக்க முடியாதவை நிலம், நீர், காற்று. இன்று தாராளமாக கிடைக்கிறது என்பதற்காக அதனை இன்றே அழித்து தீர்த்தால் நாளை தலைமுறை நீர், காற்றுக்காக மிகப்பெரிய வன்முறையை சந்திக்க நேரிடும். பணக்காரர்களாக இருந்தாலும் எவ்வளவு பணம் கொடிக் கொடுத்தாலும் ஒரு சொட்டு நீரை யாராலும் உருவாக்கி விட முடியாது.

உறுதியேற்போம்

தண்ணீர் சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் கடமை, இதற்கு மற்றவர்களையோ அரசையோ குற்றம் சொல்வதால் எந்த பயனும் இல்லை. எனவே எதிர்காலத்தினருக்காகவும் இயற்கை நமக்கு அளித்த அருமையான வளமான நீரையும் சேமிக்க இன்றில் இருந்தே உறுதியேற்போம். உலகின் முதல் அபாய ஒலியை ஒலித்திருக்கும் கேப்டவுன் உணர்த்தும் விஷயம் என்ன என்பதை உணர்ந்தாலே தானாக விழிப்புணர்வு வரும்.

விழிப்புடன் இருங்கள்

கேப்டவுன் மக்கள் நீர் சேமிப்பின் அவசியத்தை உணராததால் அதற்கான பலனை தற்போது அனுபவித்து வருகின்றனர். நமக்கும் இந்த நிலை வர வெகு நாட்கள் இல்லை எனவே தண்ணீர் சிக்கனம், சேமிப்பு தேவை இக்கணம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

No comments:

Post a Comment