Search This Blog

Friday, 2 February 2018

தமிழை ஹைகோர்ட் வழக்காடு மொழியாக்க முடியாது... மத்திய அரசு திட்டவட்டம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி கூறியுள்ளார். இது குறித்து ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் பி.பி.சவுத்ரி அளித்துள்ள எழுத்து வடிவிலான அறிவிப்பில் இந்த முடிவு கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த முடிவை ஏற்காததால் தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 06.12.2006 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இந்த முயற்சிக்குத் துணை நின்றார்.

தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. கடந்த 2010ல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரை, கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் எதிரான மனநிலை

அதே வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மத்திய ஆட்சியாளர்களின் தமிழுக்கு எதிரான மனநிலை மட்டும்தான் இதற்குத் தடையாக உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி

தமிழை நீதிமன்ற மொழியாக்க ஏதேனும் ஒரு முட்டுக்கட்டையை போட வேண்டும் என்று நினைத்த மத்திய அரசு, இந்த விஷயத்தில் தாமாக முடிவெடுப்பதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டது. உச்சநீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, தமிழகத்தின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது

இந்நிலையில் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது குறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி உச்சநீதிமன்றம் தமிழை வழக்காடு மொழியாக ஏற்காத காரணத்தால் இதற்கு வாய்ப்பு இல்லை என்று கைவிரித்துள்ளது.

No comments:

Post a Comment