Search This Blog

Saturday, 20 January 2018

பட்ஜெட்டில் விவசாயம், உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை

மும்பை : பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ந் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறுகையில், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு பின்னர் நாட்டின் சூழல் உண்மையிலேயே மாறிவருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது நேரடி வரிவிதிப்பு முறை 18 சதவீதம் உயர்ந்திருக்கிறது. எதிர்பார்த்தது போல் அரசின் கடன் ரூ.30 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது. நிதி பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் விவசாயம், உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு நிதியமைச்சர் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பார். சர்வதேச அளவில் நமது பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைகிறது. நமது நாட்டின் மீது சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அதீத எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பு திட்டங்களான சாலைகள், கடல்வழி, துறைமுகம் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டங்கள் ரூ.8 லட்சம் கோடி முதலீட்டில் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் சாலை திட்டங்களுக்கான நிதியை ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி இருக்கிறோம். இதனை அடுத்த ஆண்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். மகாராஷ்டிராவில் வறட்சி பாதித்த பகுதிகளில் நீர்ப்பாசன வசதிக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கடல் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும். கடல் விமானத்தை இயக்குவதற்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை சம்பந்தப்பட்ட துறையினர் 3 மாதத்துக்குள் வகுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment