Search This Blog

Saturday, 27 January 2018

தமிழக அரசு நடத்திய அலங்கார ஊர்தி பேரணியில் கல்வித்துறையின் நிலையை முகத்தில் அடித்ததை போல சொல்லும் ஒரு போட்டோ க்ளிக்

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் நேற்று தமிழக அரசு நடத்திய அலங்கார ஊர்தி பேரணியில் கல்வித்துறையின் நிலையை முகத்தில் அடித்ததை போல சொல்லும் ஒரு போட்டோ க்ளிக்காகி அது வைரலாக பரவி வருகிறது.

69வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
விழா மேடைக்கு அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பல துறை அலங்கார அணிவகுப்பு

பள்ளிக் கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, காவல்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உட்பட 16 அரசு துறைகளின் சார்பில் அலங்கார அணிவகுப்பு நடந்தது. இதில் அந்தந்த துறைகளின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் விளக்கப்பட்டன.


இலவச லேப்டாப் சாதனை

பள்ளிக்கல்வித்துறை ஊர்தி வந்தபோது, அதன் முகப்பில், மாணவர் ஒருவர் தமிழக அரசு வழங்கிய இலவச லேப்டாப்பை தூக்கி பிடிப்பதை போன்ற படம் இருந்தது. இலவச லேப்டாப்பை சாதனையாக காண்பித்து அதை ஊர்தியில் இடம்பெறச் செய்துள்ளார்களே என மக்கள் அதிருப்தியடைந்தனர். மாணவி அனிதா மரணம் தமிழகத்தையே உலுக்கியிருந்தது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்காத கல்வித்துறை இலவச லேப்டாப்பை முன்னிலைப்படுத்தியது மக்களின் கோபத்திற்கு காரணம்.

கல்வித்துறையின் சாதனையா

நீட் தேர்வு திடீரென கட்டாயமாக்கி புகுத்தப்பட்டதை தடுக்க முடியாத கல்வித்துறைதான் அனிதாவை காவு கொடுத்தது. ஒன்று நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும் அல்லது, தேர்வை எதிர்கொள்ள தயார்படுத்தியிருக்க வேண்டும். அரசின் கைவிரிப்பால் இளம் மாணவியை காவு கொடுத்ததை பார்த்த தமிழகம், இந்த இலவச லேப்டாப்பை பார்த்து மயங்கிவிடும் என எப்படி ஆட்சியாளர்கள் யோசித்தனரோ?


தேசிய கொடி விற்கும் சிறுவன்

இதே படத்தில் மற்றொரு விஷயமும் ஆட்சியாளர்களின் நெஞ்சை சுடுவதாக அமைந்துள்ளது. இலவச லேப்டாப் கொடுத்ததால் நாங்கள் கல்வியில் சாதனை செய்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்தபடி ஒரு ஊர்தி வரும் நிலையில், அதன் எதிரே, தேசிய கொடியை விற்றபடி ஒரு சிறுவன் நிற்கும் காட்சி அது. இதுதான் தமிழக கல்வித்துறையின் நிதர்சனம். விளம்பரம் ஒன்றாகவும், நிதர்சனம் மற்றொன்றாகவும் உள்ளது என்பதை நெற்றிப் பொட்டில் அடித்து காட்டியது இந்த போட்டோ.


இப்படியாகிவிட்டது நிலை

சிறுவர்கள் கல்வி பயில வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், தரமற்ற அரசு பள்ளிகளின் மூலம், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறிக்கொண்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எம்பிபிஎஸ் வரையிலும் இதுதான் நிலை. இதைத்தான் பிழைப்புக்காக, தேசிய கொடியை விற்கும் அந்த சிறுவன் தமிழகத்திற்கு உணர்த்துகிறார். என்னதான் மாய்மாலம் செய்தாலும், உண்மை இப்படி சில காட்சிகள் மூலம், வெளியே வந்து ஊருக்கே வெளிச்சம்போட்டு காட்டிவிடுகிறது.

No comments:

Post a Comment