Search This Blog

Thursday, 11 January 2018

வருமான வரி வரம்பு உயர்கிறது? அடுத்த மாதம் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் சலுகை மழைக்கு வாய்ப்பு!

மத்திய அரசு தனது பட்ஜெட்டில், பல சலுகை மழைகளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார்.
அடுத்த ஆண்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பட்ஜெட்டில் பாஜகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் நடுத்தர மற்றும், மேல்தட்டு மக்களுக்கு பாதகம் இல்லாமல் சாதகமான பல அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிலும் குறிப்பாக வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

வருமான வரி
தனி நபர் வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதித்துறை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல் என்ற பெயரில் கீழ்கண்ட தகவல்களை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு தற்போது ரூ.2.50 லட்சம் என்ற அளவில் உள்ளது. இது ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ரூ.5 லட்சம் வரை அது உயர்த்தப்படும் என்ற ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அது இன்னும் உறுதியாகவில்லை. இவ்வாறு அந்த செய்தி தெரிவிக்கிறது.
சலுகை அளித்தது
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் மத்திய அரசு எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் சிறு சலுகை அளித்தது. அதாவது, தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் முன்பு விதிக்கப்பட்ட 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்தார்கள். ஆனால், இதனால் ஊதியம் பெரும் தரப்பினருக்கு பெரிய சலுகை கிடைக்கவில்லை.
உச்சவரம்பை அதிகரிங்கப்பா
வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த பட்ஜெட்டில் அதை நோக்கி ஜெட்லி பயணிப்பார் என அடித்துச் சொல்கிறார்கள் நிதித்துறை வட்டாரத்தில். ஆனால், அது ரூ.5 லட்சமாக இருக்குமா, ரூ.3 லட்சமாக இருக்குமா, அல்லது இரண்டுக்கும் நடுவே ஒரு தொகையாக இருக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
வருமான வரி விகிதம்

வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு குறைந்தபட்ச வரியாக 10 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதேபோல, ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ரூ.20 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment