Search This Blog

Tuesday, 16 January 2018

ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து... மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட மானியம் பெண்குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் கடைசியானதாக இருப்பது ஹஜ் புனித பயணம் செல்வது. ஆண்டு தோறும் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசின் மானியத்துடன் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக அளித்து வருகிறது. சிறுபான்மை நலத்துறையின் சார்பில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிக அளவில் விண்ணப்பம்
நடப்பு ஆண்டில் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில் ரூ. 450 கோடி ஹஜ் பயணத்திற்கு மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஹஜ் பயணிகளுக்கு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

பெண் கல்விக்காக நிதி செலவிடப்படும்
ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசால் ரூ. 750 கோடி சேமிக்க முடியும் என்னும் ரத்து செய்யப்பட்ட ஹஜ் மானிய நிதியானது சிறுபான்மையின பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் ஹஜ் பயணம் சென்றால் ரூ.3.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை பணம் செலவாகும்.

சவுதி இந்தியா ஒப்பந்தம்
இந்நிலையில் விமான பயணம் மேற்கொண்டால் மட்டுமே அதிக செலவு ஏற்படும் என்றும் கடல் வழியில் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்டால் அதிக செலவு ஏற்படாது என்றும் கூறியுள்ளார். இதற்காக சவுதி அரேபியா இந்தியா இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி
2012ம் ஆண்டு ஹஜ் மானியம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குள் படிப்படியாக ஹஜ் மானியத்தை குறைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், சிறுபான்மை நலத்துறையின் பரிந்துரையின் பேரிலுமே மத்திய அரசு மானியத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment