Search This Blog

Monday, 1 January 2018

'ரோபோ' போலீஸ்: ஐதராபாத்தில் அசத்தல்

ஐதராபாத்:போலீஸ் பணிகளை மேற்கொள்ளக் கூடிய, 'ரோபோ'வை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துஉள்ளது. தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த, 'ஸ்டார்ப் - அப்' நிறுவனமான, 'எச்போட்ஸ் ரோபோடிக்ஸ்' என்ற நிறுவனம், போலீஸ் பணிகளை மேற்கொள்ளக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளது.
இந்த ரோபோ அறிமுக நிகழ்ச்சியில், அதன் சிறப்புகள் குறித்து, நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூறியதாவது:துபாயில் மட்டுமே, இது போன்ற மனித ரோபோ பயன்படுத்தப்படுகிறது; அது பிரான்சில் தயாரிக்கப்பட்டது. நம் நாட்டிலேயே, உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், போலீஸ் பணிகளை மேற்கொள்ளக் கூடிய மனித ரோபோவை வடிவமைத்துள்ளோம்.
இந்த ரோபோ, 5 அடி, 4 அங்குல உயரத்துடன், 43 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பணிகளான, புகார்களை வாங்குவது, ஆடியோ - வீடியோவை பதிவு செய்வது, குற்றவாளிகளை அடையாளம் காண்பது, வெடிகுண்டுகளை கண்டறிந்து அழிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
ஆறு மொழிகளில் பேசும் திறன், இந்த ரோபோவுக்கு உள்ளது. தற்போது ஆங்கிலத்தில் பேசும் திறன் உள்ளது. மற்ற பிராந்திய மொழிகளை பயன்படுத்துவது தொடர்பான இறுதிக்கட்ட சோதனை நடந்து வருகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், இந்த ரோபோ பேசும்; கேள்விகள் கேட்கும்; கேள்விகளுக்கு பதிலும் அளிக்கும்.
மால்கள், சினிமா தியேட்டர்கள், அலுவலகங்களில் பாதுகாப்புப் பணியிலும் இதை பயன்படுத்தலாம். என்னென்ன வசதிகள் தேவை என்ற அடிப்படையில், இதன் விலை, ஐந்து லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும். விரைவில் இது போன்ற ரோபோக்கள் விற்பனைக்கு வர உள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment