Search This Blog

Friday, 29 December 2017

முத்தலாக் சிறிய விளக்கம்

முத்தலாக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்

உடனடி முத்தலாக் என்றால் என்ன?

"உடனடி முத்தலாக்" அல்லது "தலாக்-அல்-பித்தத்" என்பது மூன்று முறை தங்கள் மனைவியிடம் 'தலாக்' என்று ஒரே நேரத்தில் சொல்லி ஆண்கள் விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் இஸ்லாமிய வழக்கமாகும்.
இதை நேரடியாக சொல்வது, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பவது என எப்படியும் செய்யலாம். இந்த வழக்கத்திற்கு எதிராக பல இஸ்லாமிய பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த பின் அது செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

முத்தலாக் முறை : உடனடி விவாகரத்திற்கு மூன்றாண்டு சிறை!

இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் 'முத்தலாக்' வழக்கத்தை பின்பற்றுகிறார்களா?

இந்தியாவில் உள்ள சன்னி பிரிவு இஸ்லாமியர்களிடையே இந்த வழக்கம் பரவலாக இருந்தது. எனினும், சில சன்னி இஸ்லாமியர்கள் இதை தற்போது செல்லுபடியாவதாக கருதுவதில்லை. முத்தலாக் கூறி விவகாரத்து செய்யப்படும் பெண்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை எதுவும் இல்லை.
ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமியர்களே இந்தியாவில் இதை பின்பற்றுவதாக ஒரு இணையதள கணக்கெடுப்பில் தெரியவந்தது.

இது பற்றி குரான் என்ன சொல்கிறது ?
"தலாக்-அல்-அசான்" மூலம் ஓர் ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதானால், ஒரு முறை தலாக் சொல்வதற்கும் மறுமுறை சொல்வதற்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இது அவர்களின் மன மாற்றத்திற்கு வழங்கப்படும் கால அவகாசம்.
இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து கேட்பது 'கூலா' எனப்படும்.
விவாகரத்து கேட்கும் மனைவிக்கு கணவன் பராமரிப்பு செலவுக்கு பணம் கொடுக்க மறுத்தால், அம்மனைவி 'காசி' அல்லது ஷரியா நீதிமன்றத்துக்கு செல்லலாம். அங்கு வழங்கப்படும் விவாகரத்து 'ஃபஸ்க்-ஈ-நிக்கா' எனப்படும்.

திருமண ஒப்பந்தத்திலேயே தலாக் எவ்வாறு சொல்லப்பட வேண்டும் என்று பெண்கள் குறிப்பிடலாம். இது 'தஃப்வீத்-ஈ-தலாக்' எனப்படும். அதன் பொருள் மனைவிகளுக்கு தலாக் உரிமையை மாற்றுவதாகும்.
உடனடி முத்தலாக் தடை மசோதாவுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
இஸ்லாமிய பெண்கள் (திருமணப் பாதுகாப்பு) சட்டம், கால இடைவெளி இன்றி உடனடியாக முத்தலாக் சொன்னால், அதைச் சொல்லும் இஸ்லாமிய கணவன் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என்கிறது.
வழக்குத் தொடுக்கும் மனைவிக்கு, சிறையில் இருக்கும் காலகட்டத்தில் பராமரிப்பும் வழங்க வேண்டும் என்றும் அச்சட்டம் சொல்கிறது.
ஆனால், இந்த சரத்து தங்களுக்கு உதவாது என்றும் தங்கள் திருமண வாழ்வு நீடிக்க ஏதாவது வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் சில இஸ்லாமிய பெண்கள் உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
கணவனை சிறையில் அடைத்தால், திருமண வாழ்வு நீடிக்காது என்றும், சிறையில் இருக்கும்போது அவரால் பராமரிப்பு செலவுக்கு பணம் தர முடியாது என்பதால் மனைவியும் குழந்தைகளும் இன்னலுக்கு ஆளாகவே நேரிடும் என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment