Search This Blog

Tuesday, 6 February 2018

மசூர் பருப்பால் ஆபத்து.. ரேஷன் கடைகளில் வினியோகத்தை நிறுத்துகிறது தமிழக அரசு

மசூர் பருப்பில் நச்சுத்தன்மையால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ரேஷன் கடைகளில் அதன் வினியோகத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது

தமிழக அரசின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பொது விநியோகத்திட்டத்தில் உளுந்தம் பருப்பு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மசூர் என்ற வகை பருப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டது.

இந்தப் பருப்பை சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும், முடக்குவாதம்போல கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மசூர் பருப்பு கொள்முதலுக்கான டெண்டரை உணவுத்துறை வெளியிட்டு, ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்பட்டது. இவ்வகை பருப்பில் அடர் சிவப்பு நிறத்தில் சேர்க்கப்படும் சாயம் விஷத்தன்மை வாய்ந்தது எனவும் இதனை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, மசூர் பருப்பு கொள்முதலுக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்தது.

இந்நிலையில், இவ்வகை பருப்பு தொடர்ந்து விநியோகம் செய்து வரப்படும் நிலையில், இதை நிறுத்த உணவுத்துறை முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு இந்த மசூர் பருப்பு வகையால் சமைக்கப்படும் உணவுகளே இத்தனை வருடங்களாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment