Search This Blog

Thursday, 8 February 2018

மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகளை காலி செய்ய வேண்டும்... நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளை நாளை காலி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடைகளை இன்றே காலி செய்ய இந்து சமயஅறநிலையத்துறை நோட்டீஸ் அளித்த நிலையில் கடை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
மதுதரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீரவசந்தராயர் மண்டபம் அருகில் செயல்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட கடைகளில் சுமார் 38 கடைகள் தீயில் எரிந்தன.

தீ விபத்திற்கு கோவிலுக்குள் கடைகள் இருப்பதே காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர். எனவே கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் அரசு அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்றே கோவிலுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணக்கு வந்த போது இந்து சமய அறநிலையத்துறை நோட்டீசுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் கடையில் உள்ள பொருட்களை கோவில் நிர்வாகம் சொல்லும் இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருட்களை கோவிலுக்கு வெளியே எடுத்து செல்ல 3 வாரம் அவகாசம் கொடுத்த நீதிபதி நாளை கடைகளை காலி செய்தால் போதும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment