Search This Blog

Thursday, 8 February 2018

நேற்று மதுரை... இன்று திருவாலங்காடு.. ஆலயங்களில் தொடரும் தீவிபத்து.. ஜோதிடர்கள் கணிப்பு பலிக்கிறது?

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவாலங்காடு கோயில் என தீவிபத்து நிகழ்வதை பார்க்கும் போது நாட்டுக்கு ஆபத்து என்ற ஜோதிடர்களின் கணிப்பு பலித்து விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. மேலும் இது அபசகுனமாக கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள கடையில் தீப்பிடித்த நிலையில் அந்த தீ மளமளவென பரவி 50 கடைகள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து மதுரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தால் வீரவசந்த மண்டபம் கடுமையாக சேதமடைந்தது. எனினும் அங்கிருந்த நந்தியின் மாலை கூட கருகவில்லை. மண்டப மாடங்களில் இருந்த புறாக்கள் தீயில் கருகின.

ஆட்சிக்கு ஆபத்து

இந்த தீவிபத்தை ஜோதிடர்கள் அபசகுனமாகவே கருதினர். இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர். இன்னும் சில ஜோதிடர்களோ நாட்டில் பஞ்சம், வறட்சி, ஆட்சி மாற்றம், புதிய கட்சிகள் உருவாதல் உள்ளிட்டவை நடைபெறும் என்றனர். ரிஷிகளின் அம்சங்களாக இருக்கும் புறாக்கள் தீயில் கருகியது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மீனாட்சி அம்மன் கோயில்
தீவிபத்து குறித்து ஜோதிடர் வித்யாதரன் கூறுகையில் ஜோதிட ரீதியில் மதுரையை பார்த்தோமேயானால் அந்த நகரை ஆளக் கூடிய கிரகம் சனி பகவான். இவர் தற்போது மூல நட்சத்திரம் அதாவது கேதுவின் நட்சத்திரத்தில் உள்ளார். இதனால் சனி பகவானின் ஆட்சிக்கு உள்பட்ட நகரங்களில் எல்லாம் இதுமாதிரியான பாதிப்புகள் உண்டாகும்.

புதன் கிரகம்

மதுரை மீனாட்சி அம்மனை ஆளக் கூடிய கிரகம் புதன் ஆகும். அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவராக உள்ளதால் சுக்கிரனும் இந்த கோயிலின் அதிபதியாக வருகிறார். இந்த இரு முக்கியமான கிரகங்களும் பாதிப்படைந்ததால் கடந்த அக்டோபர் பொற்றாமரை குளத்தின் நீர் உட்புகுந்தது. புதனும், சுக்கிரனும் சூரியனுடன் இருப்பது நன்மையை தரும். ஆனால் இவை இரண்டும் கேதுவுடன் சேரக் கூடாது. இதனால் நாட்டுக்கும், நாட்டை ஆள்பவர்களுக்கும் ஆபத்து என்று ஜோதிடர் கூறினார்.

திருவாலங்காட்டில்....

சனி பகவான் ஆட்சிக்குட்பட்ட நகரங்களில் எல்லாம் பாதிப்புகள் உண்டாகும் என்று கடந்த வாரம் ஜோதிடர் கூறியிருந்த நிலையில் நேற்றிரவு இரவு 9.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோயிலின் ஸ்தல விருட்சமே எரிந்து நாசமாகியது. இதுவும் அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது.

மக்கள் பீதி

சனி பகவான் ஆளக் கூடிய நகரங்களில் பாதிப்பு என்றால் திருவாலங்காட்டை அடுத்து வேறு எங்கு பாதிப்பு உண்டாகும் என்றும் வறட்சி, பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு என்ற ஜோதிடர்களின் வாக்கு பலித்து விடுமோ என்றும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு பரிகாரம், ஹோமம், பூஜை புனஷ்காரங்கள் செய்ய வேண்டும் என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்த தீவிபத்தால் ஆட்சியாளர்களும் கலங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

No comments:

Post a Comment