Search This Blog

Saturday, 6 January 2018

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்காவிட்டால் அரசு என்ன சட்ட நடவடிக்கை எடுக்கும்?

Jan 6, 2018
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்காவிட்டால் அரசு என்ன சட்ட நடவடிக்கை எடுக்கும்?
1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், ( Essential Services Maintenance Act  – esma) போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது.
அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.
அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.
2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது, சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தியே. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment