Search This Blog

Saturday, 20 January 2018

தவறு செய்தது அரசாங்கமும், போக்குவரத்து கழகமும்.. தண்டனை மக்களுக்கா?

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை நஷ்டத்திலிருந்து மீட்க 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் பொதுமக்களின் தலையில் கை வைத்துள்ளது தமிழக அரசு.
மாநில மக்களை எப்போதும் பதற்றமாகவே வைத்திருப்பதில் தமிழக அரசு தான் கடந்த 2 வருடமாக "முதல் பரிசை" பெற்று வருகிறது. 2015ம் தேதி நவம்பர் வெள்ளத்தில் ஆரம்பத்த இந்த பதற்றம் அதன் பின் நிற்காமல் தொடர்ந்து வருகிறது.

பல புயல்கள், மழை, கைது, ரிலீஸ், மரணம் ஆகியவை கடந்தும் இன்னும் அப்படியே இருக்கிறது. ஆட்சிகலைப்பா இல்லையா....வெள்ளம் வருமா இல்லையா.. ஆளுநர் ஆட்சியா இல்லையா, பேருந்து ஓடுமா ஓடாதா.... என கடந்த 2 வருடமாகவே தமிழக மக்கள் பதற்றத்திலேயே உள்ளனர்.

நஷ்டத்தில் போக்குவரத்து கழகம்...

பல ஆண்டுகளாக பல மண்டல பிரிவுகளாக, பல வேறு பெயர்களில் மெதுவாக இயங்கி கொண்டிருந்த போக்குவரத்து கழகம் 2002ம் ஆண்டு அனைத்தும் ஒரே குடைக்குள் இயங்க ஆரம்பித்தது. அப்போதுதான் போக்குவரத்து கழகம் கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி கொண்டிருப்பதாக திடீரென ஒருநாள் கண்டுபிடிக்கப்பட்டது. சரிவை சரி செய்ய பல திட்டங்களை தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்தது.

திட்டங்களால் மேலும் சரிவுகள்..

நஷ்டத்திலிருந்து மீள கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எல்லாம் அதள பாதளத்தில் போக்குவரத்து கழகத்தைகொண்டு போய் சேர்த்தது. இதனால் புதிய திட்டம் தீட்டிய தமிழக அரசு பல வகையான பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. செமி ஸ்லீப்பர், ஏசி, வெள்ளை போர்ட், பச்சை போர்ட், டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் இப்படி ஏழைகளின் வாகனமாக இருந்த பேருந்து, மக்களுக்கு அந்நியப்படும் அளவிற்கு மாற்றங்கள் நிகழ்ந்தன. கடந்த பல ஆண்டுகளாக சிறுக சிறுக ஏற்றி இருக்கப்பட வேண்டிய டிக்கெட் கட்டணமும் ஒரேடியாக உயர்த்தப்பட்டன. இது ஏழு ஆண்டுக்கு முன்புநடந்த கட்டண உயர்வு. இதற்கும் அப்போதே மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ரயில் பயணிகளான பேருந்துவாசிகள்

அரசின் இந்த திடீர் கட்டண உயர்வால், பேருந்து தான் வாழ்க்கை என்று தினமும்பயணம் மேற்கொண்டு வந்த மக்கள், ஒரு கட்டத்தில் தலை தெறிச்சது போல மின்சார ரயில்களை நாடி செல்ல ஆரம்பித்தனர். இதனால் பேருந்து கழக அதிகாரிகள் திட்டத்தில் மண் விழுந்து, மேலும் மேலும் கடன் தொல்லையில் சிக்கியது அரசு போக்குவரத்து கழகம். இதனால் மீள முடியாத நஷ்டத்திற்கு போக்குவரத்து கழகம் தள்ளப்பட்டது.

கட்டண உயர்வால் அதிர்ச்சி

இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்டநகர, மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம்ரூ.12 ஆகவும் இருந்தது. அந்த வகை பஸ்களில் இன்று முதல்குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டுஇருக்கிறது. இதேபோன்று சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

பேருந்து ஏழைகளின் வாகனமில்லை

ஏழைகளின் வாகனம் என்று பெயர் பெற்ற பேருந்து தற்போது நவீனத்துவம், கட்டண உயர்வு என்ற பெயரில் சாமானியர்களுக்கு பயன்படாத எட்டாத நிலைக்கு செல்ல வழிவகை செய்து வருகிறது. பணக்காரர்களுக்காக வசதிகளை புதிய சட்டங்களை செய்து கொடுக்கும் அரசு, சாமானியர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டங்களை செயல்படுத்துவது எதனால் என்ற கேள்வி தற்போது எல்லோர் மனதிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

மக்கள் பொறுப்பாக வேண்டுமா...

யார் ஆட்சிக்கு வந்தாலும் கட்சி பணிக்கும், சொந்த மாநாட்டிற்கும் அவர்கள் கை வைப்பது என்னவோ தமிழக அரசு போக்குவரத்துகழகத்தில் தான். தற்போதைய ஆட்சியில் கட்சிப்பணி மட்டுமில்லாது இப்போது அரசு விழாக்களுக்கே அரசுபேருந்துகள் ஓசியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. நஷ்டம் எழுதப்படுவதோ மக்களின் தலையில், கட்டண உயர்வு என்றபெயரில்..

சொந்த ஊர் போக முடியுமா..?

சிலநூறுகளில் சொந்த ஊர் சென்றுவந்துவிடலாம்என்ற நம்பிக்கையில் உழைத்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் இனிமேல் சில ஆயிரங்கள் தந்தால்தான் சொந்த ஊரை பார்க்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் என்று அனைவரின் தலையிலும் இடியாக இறங்கியுள்ளது இந்த பேருந்து கட்டண உயர்வு.

மீண்டு விடுமா போக்குவரத்து கழகம்..?
அரசு போக்குவரத்து கழக கட்டடங்கள், பணிமனைகள், பேருந்துகள் என அனைத்தும் தற்போது பலஆயிரம் கோடி ரூபாய் அடமானத்தில் உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகமே தற்போது அந்த பணத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் குருவி தலையில் பனங்காயை வைத்தது போல அல்லாடிக் கொண்டிருக்கும் போக்குவரத்து கழகம், அந்த சுமையை பட்டாம்பூச்சிகளான மக்களின் தலையில் இறக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தான் சாமானியர்களின் கேள்வி.

சரி இந்த கட்டண உயர்வால் போக்குவரத்து கழகம் நஷ்டத்திலிருந்து மீண்டு வந்துவிடுமா..?, கண்டிப்பாக இல்லை, மீண்டும் கட்சி மாநாடு, அரசு விழாக்கள், முறைகேடுகள் என்று ஆட்சியாளர்களும், எரியும் வீட்டில் பிடுங்குவது எல்லாம் லாபம்என அரசு போக்குவரத்து அதிகாரிகளும் அரசு போக்குவரத்து கழகத்தை மீண்டும்நஷ்டத்தில் கொண்டு விடப்போகிறார்கள்,...... ஏனென்றால் 7 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுக்கு பின்னரும் இதுதான் நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment